ஆதிசேஷனின் வேண்டுகோளுக்கிணங்கி, திருப்பாற்கடல் தரிசனத்தை மகாவிஷ்ணு காட்டிய ஸ்தலம். ஆதிசேஷன் தனது விஷக்காற்றை விட்டு அசுரர்களைக் கொன்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இக்கோயில் ஓர் அழகிய குடவரைக் கோயில்.
மூலவர் சத்யகிரிநாதன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் அழகிய மெய்யர். தாயார் உய்யவந்த நாச்சியார், உஜ்ஜீவனத் தாயார் ஆகிய திருநாமங்களால் வணங்கப்படுகின்றார். ஸத்யதேவதைகளுக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
மற்றொரு மூலவர் உய்யவந்தான் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விடப் பெரிய திருமேனி. மூலவர் பின்புறம் சுவற்றில் பிரம்மா முதலிய சகல தேவர்களும் செதுக்கப்பட்டுள்ளனர். ஆதிசேஷன் தனது விஷக்காற்றை அசுரர்கள் மீது விடும் சிற்பம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
திருமங்கையாழ்வார் 9 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
|